அப்பா தேவகவுடாவிற்கும், மகன் குமாரசாமிக்கும் பதவி விஷயத்தில் அதிஷ்டம் இல்லாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.  

கடந்த 1996-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக கர்நாடகாவை சேர்ந்த தேவகவுடா பதவி ஏற்றுக்கொண்டார். லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், மேற்கு வங்கத்தில் மிக நீண்டகாலம் முதல்வராக இருந்த ஜோதிபாசு என்று வடமாநிலங்களின் பெரும்பான்மையானவர்கள் இருக்கும்போது, வெறும் 12 எம்.பி.க்கள் வைத்திருந்த தென் இந்தியாவைச் சேர்ந்த தேவகவுடாவுக்கு  அதிர்ஷ்டக்காற்று வீசியது.  பதவியேற்ற அவர் 11 மாதங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில், அதே துரதிருஷ்டம் தான் இப்போது அவரது மகன் குமாரசாமிக்கும் தொடர்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் 6 நாட்களில் ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்த நிலையில் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

 

ஆனால், குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். தொடர்ந்து நிலவிய அதிருப்தி காரணமாக காங்கிரஸ் - மஜத இடையே அதிக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13, மஜத எம்.எல்.ஏக்கள் 3 திடீரென ராஜினாமா செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியது. இதன்மூலம் குமாரசாமி அரசு 425 நாட்களுடன் கவிழ்ந்தது. 

அப்பா தேவகவுடாவாக இருந்தாலும் மகன் குமாரசாமியாக இருந்தாலும், பிரதமர் முதல்வர் என்று பதவிகள் வருகிறது. ஆனால், முழுமையான பதவிக்காலத்தை முடிக்கும் அதிர்ஷ்டம் இல்லை. அப்பாவுக்கும் மகனுக்கும் அதிஷ்டமே இல்லாத சூழல் நிலவி வருகிறது.