கிருஷ்ணகிரி பட்டாசு தொழிற்சாலை விபத்து.. சிலிண்டர் வெடித்ததுதான் காரணமா? மத்திய அமைச்சர் விளக்கம்!
கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை அருகே ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இதில் நேற்று எதிர்பாராமல் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உடல் சிதறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் அந்த பட்டாசு தொழிற்சாலை மட்டுமல்லாமல் அருகில் இருந்த சில வீடுகள் மற்றும் ஹோட்டல்களும் பெரிய அளவில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தமிழகத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய வெடி விபத்தாகவும் தற்பொழுது இது மாறி உள்ளது.
அந்த பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒன்பது பேர் இறந்த நிலையில், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அருகில் இருந்த வீடு மற்றும் ஹோட்டலில் இருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்களும் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
இந்நிலையில் இந்த பட்டாசு குடோனில் இருந்த சிலிண்டர் வெடித்து தான் இந்த விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி. அவர் வெளியிட்ட அறிக்கையில் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் பட்டாசு தொழிற்சாலைக்கு அருகில் உள்ள எந்த சமையல் எரிவாயு நிறுவனமும், சிலிண்டர்களை அந்த தொழிற்சாலைக்கு வழங்கவில்லை என்றும் ஆதாரங்களுடன் அவர் கூறினார். அதேபோல ஒரு பட்டாசு கிடங்கினை, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைக்க அனுமதி அளித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அந்த பட்டாசு குடோன் உரிய உரிமம் இன்றி நடைபெற்று வந்ததா? என்பது குறித்தும் தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஹோட்டல் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகில் எப்படி ஒரு பட்டாசு தொழிற்சாலை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து தற்பொழுது தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.