Kerala Train fire: மர்ம நபரின் புகைப்படம் வெளியீடு; தீவிரவாதிகளின் சதி செயலா என்ற கோணத்தில் விசாரணை!!
கோழிக்கோட்டில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் உடன் பயணம் செய்த பயணிகளை தீவைத்து எரித்துக் கொன்ற நபர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கேரளா போலீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இந்த தாக்குதலை கேரளா போலீசார் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுடன் தீவிரவாதிகளுக்கு அல்லது மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிரவாத தடுப்பு படையும், ரயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர். தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் கேரள அரசிடம் அறிக்கை கேட்டு உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கேரளா எம்பி முரளீதரன் நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். மேலும், மத்திய அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊழல்வாதிகளில் ஒருவர்கூட தப்பிக்கக் கூடாது: சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ஆழப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிகோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, இரவு 9.37 மணிக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் D1 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் மற்றும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி, நெருப்பை பற்ற வைத்தார். ரயிலில் இருக்கும் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதற்குள், அந்த மர்ம நபர் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட மூவர் உயிரிழந்தனர். ரயில் கண்ணூர் வந்து சேர்ந்த பின்னர் உயிரிழந்த பெண் மற்றும் குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் தேடியதில், இவர்களின் உடல்கள் கருகிய நிலையில் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன. இவர்கள் கண்ணூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ரயிலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தபோது, இவர் ரயிலில் இருந்து குதித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ரயிலில் இருந்து குதித்த மற்றொருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர் சிவப்பு சட்டை அணிந்து, தலையில் தொப்பி அணிந்து இருந்ததாக தெரியவந்துள்ளது. அவர் குறித்த புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.60 லட்சம் கோடியாக அதிகரிப்பு; நிதி வருவாயும் 22 சதவீதம் உயர்வு!!
புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் தண்டவாளத்தில் இருந்து புத்தகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த புத்தகத்தில் கழகூட்டம், சிரயான்கிழவு, கன்னியாகுமரி என்று எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் இருந்து மொபைல்போன், பர்ஸ், துணிகள், ஸ்நாக்ஸ், பேனா, பாட்டில் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகள் சதி எதுவும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.