இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பை மீறி கேரள அரசு மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததுள்ளது. முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு திட்டமான பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்துள்ளது. மாநிலத்தின் சார்பில் கல்வித்துறை செயலாளர் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டார். பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கேரளாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1500 கோடி எஸ்எஸ்கே நிதி உடனடியாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கேரள அரசுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு
கேரள அமைச்சரவை கூட்டத்தின்போது அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையக் கூடாது என்று மூன்று முறை சிபிஐ இந்த திட்டத்தை எதிர்த்தது. ஆனாலும் எங்களின் கருத்தை கணக்கில் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ-இன் மாணவர் பிரிவான அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), மாநில அரசின் இந்த நடவடிக்கையை, இடதுசாரி முன்னணியின் (Left Front) கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.
பின்வாங்கப் போவதில்லை; சிபிஎம் உறுதி
அதே வேளையில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கொள்கை மாற்றம் இல்லை என்றும் சிபிஎம் தலைமை கூறியுள்ளது. சிபிஎம் செயலகக் கூட்டத்திற்குப் பிறகு இந்த நிலைப்பாடு மேலும் உறுதியாகியுள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான சிபிஎம்-சிபிஐ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎம் ஸ்ரீ திட்டம் என்றால் என்ன?
மாநிலங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சிறப்பாக மேம்படுத்தி, சிறந்த கற்றல் மையங்களாக மாற்றுவதற்கான மத்திய அரசின் திட்டமே பிஎம் ஸ்ரீ. பிரதான்மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா என்பதே இத்திட்டத்தின் முழுப்பெயர். கல்விக் கொள்கையில் வகுப்புவாதம் மற்றும் வணிகமயமாக்கல் இருப்பதாகக் கூறி, இடதுசாரிகள் தொடக்கம் முதலே இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
ஏனெனில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டியிருக்கும். பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 14,500 பள்ளிகள் விரிவாக நவீனப்படுத்தப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன தொழில்நுட்பங்கள், ஆய்வகம், நூலகம், விளையாட்டு வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்படும்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாத தமிழக அரசு
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதி கிடைக்கும். இதில் 60% மத்திய அரசின் பங்காகவும், 40% மாநில அரசின் பங்காகவும் இருக்கும். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்தால் தான் கல்வி நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
