Kerala Chief Minister demanded RSS. Manager removal - RSS. The actions of the organization

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்.எஸ். எஸ். தலைவர் குந்தன் சந்திரவாத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் பலர் கொல்லப்படுவதைக் கண்டித்து, மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில்நேற்றுமுன்தினம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மிரட்டல் பேச்சு

அப்போது உஜ்ஜைன் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் குந்தன் சந்திரவாத் பேசுகையில், “ கேரள மாநிலத்தில் இதுவரை 300-க்கும் அதிகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், கரசேவகர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

கேரள முதல்வர்பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு, ரூ. ஒரு கோடி மதிப்புக்கும் அதிகமான எனது சொத்துக்களை நான் தருகிறேன்'' என மிரட்டல் விடுத்தார்.

கண்டனம்

இந்த பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பே கண்டனம் தெரிவித்தது. அந்த அமைப்பின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஜே. நந்தகுமார் பேசுகையில், “ ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை.

ஜனநாயக முறையில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது நடக்கும் தாக்குதலை எதிர்ப்போம். '' என்றார். மேலும், சமூக வலைதளதத்திலும் அவருக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்தது.

மன்னிப்பு, வருத்தம்

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்திரவாத் , கேரள முதல்வர் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், “ ஆர்.எஸ். எஸ். அமைப்பு தொண்டர்கள், கரசேவகர்கள் கொல்லப்படுவதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

அந்த உணர்ச்சி மிகுதியில் இதுபோல் பேசி விட்டேன். நான் பேசிய வார்த்தைகளை வாபஸ்பெற்றுக்கொண்டு, அதற்காக வருத்தமும், மன்னிப்பும் கோருகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

நீக்கம்

இந்நிலையில், சந்திரவாத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஆர்.எஸ். எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுவதாவது- கேரள முதல்வருக்கு மிரட்டல் விடுத்த சந்திரவாத்தின் செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வன்முறையில் நம்பிக்கை இல்லாதது. சந்திரவாத்தை வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.