அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கே.சி.பழனிசாமி அளித்துள்ள மனுவை 4 வாரத்தில் விசாரித்து முடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். அதிமுகவிலிருந்து நீக்கி கட்சித் தலைமை பிறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடர்பாக கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த நோட்டீஸ் அளிக்கவில்லை. ஆகையால் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கே.சி.பழனிசாமி புகார் மனு மீது செப்டம்பர் 13-ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 13-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கே.சி. பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.