ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸ்பிர் எனப்படும் குண்டு துளைக்காத வாகனம் ஒரு தேடுதல் வேட்டை நடவடிக்கைக்காக ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. பதர்வா மற்றும் சம்பா இடையே கானி டாப் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

10 ராணுவ வீரர்கள் பலி

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானவுடன் கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை நிலவிய போதிலும், ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த வீரர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக உதம்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்

நமது வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்

இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வேதனையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ''தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது 10 துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களின் உயிர்களை இழந்தது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறந்த சேவையையும், தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை

''இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறது. காயமடைந்த 10 வீரர்கள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்றும் அவர் கூறியுள்ளார்.