கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஆன நிலையில் இதுவரை 17 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், குமாரசாமி அரசு கவிழ்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க முதல்வர் எடியூரப்பா உரிமை கோரினார். ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். நாளை எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டப்பேரவையில் நிரூபிக்க உள்ளார். 

இந்நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்ட நிலையில் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 3 மஜத கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

ஏற்கெனவே அதிருப்தி எம்.எல்ஏ.க்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சபாநாயர் உத்தரவு பிறப்பித்திருந்தார். மொத்தமாக 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.