கர்நாடகாவில் தனியார் பேருந்தும்- மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடகா மாநிலம், சிக்பல்லாபூர் மாவட்டத்தில் சிந்தாமணி அருகே உள்ள முருகுமல்லாவில் தனியார் பேருந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 12 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் சிலரது கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.