என்னை பின்னிருந்து முதுகில் குத்தியுள்ள என் நண்பர்கள், நாளை உங்களையும் (பாஜக) முதுகில் குத்துவார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தனர். மேலும், ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பெரும்பான்மை இழந்த குமாரசாமி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஆனால், அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில் சபாநாயகர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதையொட்டி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

 

அதைதொடர்ந்து கடந்த 18-ம் தேதி முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது. ஆளுநர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பை ஆளும் தரப்பு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் 3-வது நாளான இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், நான் நினைத்திருந்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஒரு அறையில் பூட்டி அடைத்திருப்பேன். ஆனால், நட்புக்காகவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அறையில் வைத்து அடைத்து வைக்கவில்லை என்றார். மேலும், அவர் பேசுகையில், பாஜக என்னை முதுகில் குத்தவில்லை. மும்பையில் இருப்பவர்கள்தான் என்னை முதுகில் குத்தினார்கள். விரைவில் அவர்கள் பாஜகவினர் முதுகிலும் குத்துவார்கள்’ என்றார்.