பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்க உயர் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
Bengaluru Stampede: Karnataka Cricket Association Top Officials Resign: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சின்னசாமி கூட்ட நெரிசல்
இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக விராட் கோலியையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வழுத்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெய்ராம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கர்நாடக கிரிக்கெட் சங்க உயர் அதிகாரிகள் ராஜினாமா
கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாகவும், இதில் எங்களது தார்மீகப் பொறுப்பின் காரணமாகவும், நேற்று இரவு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு ஏ. சங்கர் மற்றும் இ.எஸ். ஜெய்ராம் இருவரும் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர்.
கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (கேஎஸ்சிஏ) அதிகாரிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் நேற்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் ஈ.எஸ். ஜெயராம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர். கிருஷ்ண குமார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
ரசிகர்களுக்கு நிதி உதவி செய்யும் ஆர்சிபி
"நேற்று பெங்களூருவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வேதனையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என்று ஆர்சிபி அறிவித்து இருந்தது. மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, இறந்தவர்களின் பதினொரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதி உதவியை ஆர்சிபி அறிவித்துள்ளது. கூடுதலாக, இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்கள் விரைவில் குணமடைய நிதி உதவி வழங்கப்படும் எனவும் ஆர்சிபி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
