கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி தொண்டரை கொலை செய்த குற்றவாளிகளை ஈவு ஈரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள் என்று முதல்வர் குமாரசாமி ஆவேசமாக பேசியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சி கவிழப்போகிறது என்று வதந்திகள் பரவியது. அந்த சர்ச்சையை சமாளித்து வருவதற்குள் மற்றொரு சர்ச்சையில் முதல்வர் குமாரசாமி சிக்கியுள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதி நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை காரில் சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து நிர்வாகி பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் குமாரசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிர்ச்சியடைந்த அவர் செல்போனில் யாரிடமோ இந்த கொலை மிகவும் கவலை அளிக்கிறது என்றார். பிரகாஷ் ஒரு நல்ல மனிதர். எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. குற்றவாளிகளை தயவு தாட்சனையின்றி கண்டதும் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறினார். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை சற்று எதிர்பாராத முதல்வர் அதிர்ச்சியடைந்தார்.

 

உடனே பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தயவு தாட்சனையின்றி கண்டதும் சுட்டுக் கொல்லுங்கள்  என நான் உத்தரவிடவில்லை. கட்சி தொண்டர் படுகொலை செய்யப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு பேசினேன் என்று கூறியுள்ளார்.