பாஜக மேலிடத்தில் உத்தரவு கொடுத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு இருக்காது, என்று எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக கமல்நாத் செயல்பட்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்து, சிவராஜ் சவுகான் முதல்வராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 

மொத்தம் உள்ள 231 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்களும், சமாஜ்வாதி 2 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் 1 எம்.எல்.ஏ , 1 சுயேட்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக 108 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது.

 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா கூறுகையில் கர்நாடகத்தில் இருந்த அரசியல் சூழலைக் காட்டிலும் மத்தியப் பிரதேசத்தில் மிக மோசமாக இருக்கிறது. பாஜக மேலிடத்தில் இருந்து உத்தரவும் வந்ததும் அடுத்த 24 மணிநேரத்தில் காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்படும் என கூறியுள்ளார்.