பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜேடியு கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சிறையில் இருந்தபடி 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக, ஜேடியு அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணிக்கு போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றி
பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி 84 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஒருவர் சிறையில் இருந்தபடி வெற்றி பெற்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. அதாவது சிறையிலிருந்து போட்டியிட்ட ஜேடியு தலைவர் அனந்த் குமார் சிங், மொகாமா தொகுதியில் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அனந்த் குமார் சிங் கைதானது ஏன்?
மொகாமாவில் அக்டோபர் 30 அன்று நடந்த அரசியல் பேரணியின் போது கொல்லப்பட்ட ஜன சுராஜ் கட்சி ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் கொலையில் தொடர்புடைய வழக்கில், அனந்த் குமார் சிங் நவம்பர் 2 அன்று கைது செய்யப்பட்டார். அவரும் அவரது கூட்டாளிகளான மணிகாந்த் தாக்கூர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்டனர்.
6வது முறையாக வெற்றி
மொகாமா தொகுதியில் அனந்த் குமார் சிங் 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தில் சேருவதற்கு முன், அவர் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்தபடி அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
மக்கள் வெற்றி பெற வைத்தது தவறு
''ஒருவர் சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்றால் அவர் அந்த தொகுதியில் ஏராளமான நன்மைகள் செய்திருந்தால் மட்டுமே முடியும். இதை அறிந்து தான் மக்கள் அனந்த் குமார் சிங்கை வெற்றி பெற வைத்துள்ளனர்'' என்று ஜேடியு கட்சியினரும், அனந்த் குமார் சிங் ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் ''சிறையில் இருக்கும் ஒருவரை வெற்றி பெற வைத்தது தவறான முடிவாகும்'' என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
