ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அங்கு, விபத்தில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவரை, உள்ளூர் வாலிபர் மீட்ட சம்பவம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, தீவிரவாதி பர்ஹான்வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த வன்முறை சம்பவத்தில், 100க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கலவரத்தை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில், நேற்று இரவு ராணுவ வீரர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. மரத்தில் மோதி நொறுங்கிய வாகனத்திற்குள், ராணுவ வீரர் ஒருவர் சிக்கி படுகாயமடைந்தார். அவரை மீட்க, சக வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
அப்போது, அவ்வழியாக சென்ற ஒரு உள்ளூர் வாலிபர், அவர்களுக்கு உதவியாக வந்தார். உடனடியாக லாரி ஒன்றை எடுத்து வந்து, ராணுவத்தின் வாகனத்திற்கு அருகே நிறுத்தி, அவரை மீட்டார்.
இந்த காட்சியை, அப்பகுதி மக்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். இந்த காட்சி தற்போது, சமூக வலைதளங்களிலும் பரவி, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
