பெரும் எதிர்பார்ப்பு.. சந்திரயான் 3 மாடலை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம்..
சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மாடலை வைத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சந்திரயான்-3 விண்கலம் நாளை (ஜூலை 14) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.55 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திராயன் 2 திட்டத்தின் தொடர்ச்சி தான் இந்த சந்திரயான் 3 திட்டமாகும். சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான் 2 மிஷன் தோல்வி அடைந்தது. 2019-ல் நடந்த இந்த தவறை சரிசெய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் சந்திரயான் 3 திட்டம். நிலவின் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நுழைவதற்கு தேவையான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 அதிக எரிபொருளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்திரயான் விண்கலம், எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த மூன்று முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று மதியம் 1.05 மணிக்கு 26 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்குகிறது. இந்த நிலையில் சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் சந்திரயான் 3-ன் மாதிரியை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!