சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!
விஞ்ஞானி வீர முத்துவேலுக்குக் கீழ் 29 துணை இயக்குநர்கள் உள்பட பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கல திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர். முதல் இரண்டு திட்டங்களைப் போலவே சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பணிபுரிந்துள்ளார். அவர்தான் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர் வீர முத்துவேல். தந்தை பழனிவேல் ரயில்வே ஊழியராக இருந்தவர். இவரும் ரயில்வே பள்ளியில் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால், விண்வெளியில் இருந்த ஈடுபாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐஐடியில் மேற்படிப்பை நிறைவு செய்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
நுணக்கமான ஹார்டுவேர் பணிகளியும் ஈடுபாட்டுடன் செய்யக்கூடிய ஆர்வம் கொண்ட இவருக்கு, 1989ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு அமைந்தது. இஸ்ரோவில் சேர்ந்த பின்பு அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், இஸ்ரோவில் பணியாற்றுவதையே அவர் விரும்பினார்.
2016ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரை தொடர்பான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. வீர முத்துவேலின் தன் ஆய்வில் கையாண்டிருக்கும் தொழில்நுட்பம் நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கவும், விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்குவதற்கும் உதவக்கூடியது.
30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல பொறுப்புகளில், வெவ்வேறு திட்டங்களிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்க வீர முத்துவேல் கடந்த 2019ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பாராட்டுகளைக் குவித்த அவரது ஆய்வுதான் இதற்கு காரணமாக இருந்தது.
சந்திராயன் 2 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா பணியாற்றினார். அவருக்குப் பின் விஞ்ஞானி வீர முத்துவேல் அந்தப் பொறுப்பை ஏற்றார். இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்களுடன் இன்னும் பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
நான்கு ஆண்டுககளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கே பெருமை சேர்க்கும் இத்தகைய திட்டத்தில் தமிழர் ஒருவர் முக்கிய பங்காற்றிவருவது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்ப்பது என்பதில் சந்தேகமில்லை.