குஜராத் முதல்வராக மோடி இருந்த போது லஞ்சம் வாங்கினார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சா ட்டை சட்டசபையில் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதில் ஜனாதிபதி தலையிட்டு, அந்த நடவடிக்கையை கைவிடும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்ற ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதற்கு ஆதாரமாக டெல்லியில் ஆதித்யா பிர்லா குழுமத்தில் 2013ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணத்தை காட்டினார்.

அப்போது நடந்த அந்த சோதனையில் ரூ.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் , ஆவணங்கள், நிறுவன கணக்கு புத்தகங்கள், லேப்டாப்கள் அப்போது சிக்கின என்றும் , அதில் குஜராத் முதல்வர் & ரூ-25 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் மோடிக்கு லஞ்சம் கொடுத்தது தெளிவாக தெரிய வந்துள்ளது என்று பரபரப்பான குற்றச்சாட்டை கெஜ்ரிவால் கூறியுள்ளார். சட்டசபை தீர்மானத்துடன் இந்த குற்றச்சாட்டையும் இணைத்து ஜனாதிபதிக்கு அனுப்பும்படியும், இதன் மீது சுப்ரீம்கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கெஜ்ரி வால் கேட்டுக்கொண்டார்
