மறுபடியும் மோடி அறிக்கையா?; மத்திய அரசு பரபரப்பு பதில்
வங்கி லாக்கர் முடக்கம்; தங்க, வைர நகைகளுக்கு கட்டுப்பாடு
புதுடெல்லி, நவ. 17-
பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க உள்ளார் என பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. அது வதந்தி, அப்படி எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என மத்திய அரசு அறிக்கை வௌியிட்டுள்ளது.
செல்லாது அறிவிப்பு
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத பணத்தை மாற்ற வங்கி, தபால்நிலையம் முன் காத்துக்கிடக்கிறார்கள்.
திண்டாட்டம்
ஏ.டி.எம்.களில் பணம் இல்லை; அன்றாடச் செலவுக்கும் காசு இல்லை; ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி அறிவிப்பு விடுத்து 8 நாட்கள் ஆகியும், மக்கள் மனதில் அந்த ‘பீதி’ அதிகரிக்கிறதே தவிர இன்னும் குறையவில்லை. இதனால், பல மாநிலங்களில் உயிரழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
புலம்பல்...
இதற்கிடையே பிரதமர் மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி, ரூ100, ரூ50 நோட்டுக்களையும் செல்லாது என அறிவிக்க உள்ளார் என காற்றில் வேகமாக வதந்திகளை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
இதனால், சில்லறைக்கு கூட மத்தியஅரசு ‘ஆப்பு’ வைக்கிறதே என மக்கள் புலம்பத் தொடங்கி, அடுத்து என்ன செய்வது என புலம்பி வருகின்றனர்.
காற்றில் பரவும்
மேலும், ரூ.2000 நோட்டு மோசமான தரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது; சாயம் போகிறது; பாதுகாப்பு இல்லாதது; என்றெல்லாம் வகை, வகையாக வதந்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், வங்கியில் லாக்கர் வசதி வைத்துள்ளவர்களின் லாக்கர்களை அரசு முடக்கப்போகிறது; தங்கம், வைர நகைகள் வைத்திருந்தால் அதற்கு கட்டுப்பாடு கொண்டுவர மத்தியஅரசு அறிக்கை விடப்போகிறது என்றும் மக்களை பீதியையும், பதற்றத்தையும் உண்டாக்கும் வகையில் வதந்திகள் உலா வருகின்றன.
விளக்கம்
இந்நிலையில், இந்த வதந்திகளை மறுக்கும் வகையில், மத்திய அரசு ேநற்று அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது
ரூ.50, ரூ.100 நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க மத்திய அரசுக்கு எந்த எண்ணமும் இல்லை. இது ஆதாரமற்றது. வீண்புரளி. வங்கி லாக்கர்கள், தங்கம், வைர நகைகளை முடக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது.
நவீன தொழில்நுட்பம்
மக்கள் நினைப்பது போல், ரூ.2000 நோட்டு குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கவில்லை. அதிகமான பாதுகாப்பு தரத்துடன் ‘இன்டாலிகோ பிரின்டிங்’ முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டை வெறும் துணியால் தேய்த்தால், ரூபாய் நோட்டில் உள்ள மை துணியில் பட்டு, ஒரு விதமான மின்அதிர்வு (டர்போ எலெக்ட்ரிக் எபெக்ட்) உண்டாகும். ரூ.2000 நோட்டில் மைக்ரோ சிப் ஏதும் இல்லை.
மேலும், கருப்பு பணத்தை தடுக்கும் வகையில், பினாமி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, வெளிநாடுகளில் இருந்தும் தேவையான தகவல்களை பெறலாம் என்பதால், அமலாக்கப்பிரிவு துறையினர் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.
பான்கார்டு
வங்கியில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்பவர்கள் பான்கார்டு நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்பிக்கவும் ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், மற்ற நிதி பரிமாற்றங்கள் செய்யும் போது, வங்கிகள் கேட்கும் பட்சத்தில், வருமான வரிச் சட்டத்தின் படி பான் கார்டை மக்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
