இந்தியாவை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென பாஜகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை விருதுகளை பெற்று அசத்தியுள்ளார். இதுவரை 24-க்கும் அதிகமான சர்வதேச பேட்மிட்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், அவ்வப்போது பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து சாய்னா நேவால் புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனிடையே, பாஜகவில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில் சாய்னா நேவால் தனது சகோதரியுடன் டெல்லி பாஜக அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இவர் பாஜவுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். 

இதனையடுத்து, பாஜகவில் இரைணந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் "நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிகவும் கடின உழைப்பாளி. அதேபோன்ற கடின உழைப்பாளர்களை நான் விரும்புகிறேன். பிரதமர் மோடி நாட்டிற்காக இவ்வளவு செய்வதை என்னால் பார்க்க முடிகிறது.  அவருடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.