மிகவும் ஒழுங்கீனமான நகரம் டெல்லிதான்: இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி போக்குவரத்து மீறலை உதாரணம் காட்டி மிகவும் ஒழுங்கீனமான நகரம் டெல்லிதான் என்று கூறியிருக்கிறார்.
நாட்டிலேயே மிகவும் ஒழுக்கம் இல்லாத நகரம் தலைநகர் டெல்லிதான் என்று இன்போசிஸ் நிறுவனத் தலைவரும் முன்னணி தொழிலபதிபருமான என். ஆர். நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
தலைநகரில் டெல்லியில் போக்குவரத்து விதிமீறலை எடுத்துக்காட்டாகக் கூறி, டெல்லி மிகவும் ஒழுங்கீனமான நகரம் என்றும் அதனால்தான் டெல்லிக்கு வருவதை சங்கடமாக உணர்கிறேன் என்றும் கூறி நாராயண மூர்த்தி இருக்கிறார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நாராயண மூர்த்தி இவ்வாறு பேசி இருக்கிறார்.
பொது நிர்வாகத்தில் நேர்மையின்மை ஒழியவேண்டும் என்றால், பொதுமக்கள் தங்கள் சொத்துக்களைவிட பொதுச்சொத்துகளை அதிக மதிப்பு மிக்கதாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து டெல்லியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பற்றிப் பேசினார்.
WEST BENGAL: சமூக விரோதிகளின் சொத்துகளைக் அரசு கைப்பற்ற சட்ட மசோதா நிறைவேற்றம்
"டெல்லிக்கு வருவது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது, இந்த நகரம் மிகவும் ஒழுங்கீனமாக இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் நேற்று விமான நிலையத்திலிருந்து வந்தேன். ஒரு போக்குவரத்து சிக்னலில், நிறைய கார்கள், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள் இருந்தன. பலர் அலட்சியமாக போக்குவரத்து சிக்னலை மீறிச் செல்கின்றனர். ஓரிரு நிமிடம்கூட காத்திருக்க முடியாது என்றால், அவர்கள் எதற்கும் காத்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
"இவற்றை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். சின்னச் சின்ன இடங்களிலும் சரியான பாதையில் செல்வதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் படிப்படியாக தாமாகவே விதிகறை மீறாமல் இருக்கும் பண்பு வந்துவிடும்." என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
தனது ஆசிரியரிடமிருந்துதான் கார்ப்பரேட் நிறுவனத்தை நிர்வகிப்பது பற்றிய முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டதாகவும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறினார்.