Javed Akhtar: மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிகிறார்கள்! ஜாவேத் அக்தர் பேச்சு
கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருவதாகத் தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவுகிறார்கள். எனவே 2008 மும்பை படுகொலைகளைப் பற்றி இந்தியா பேசும்போது பாகிஸ்தானியர்கள் புண்படக்கூடாது என கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் கவிஞர் பைஸ் அகமது பைஸின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜாவேத் அக்தர் பேச்சின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அதில் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாகப் பேசிய அவர், “நான் மும்பையில் இருந்து வருகிறேன். மும்பை தாக்குதல் பற்றி எல்லோருக்கும் தெரியும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நார்வேயில் இருந்தோ, எகிப்தில் இருந்தோ வரவில்லை. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னமும் உங்கள் நாட்டில்தான் சுதந்திரமாக உலவுகிறார்கள். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இதனால் இந்தியர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கோபம் அலகவேண்டும் என்றால், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Sri Lanka Elections: வாக்குச்சீட்டு அச்சடிக்க நிதி இல்லை! இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிறதா?
பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் வரவேற்கப்பட்டாலும், மறைந்த லதா மங்கேஷ்கரின் ஒரு நிகழ்ச்சியைகூட பாகிஸ்தான் நடத்தியதில்லை என்றும் அவர் கூறினார். “நுஸ்ரத் பதே அலி கான் மற்றும் மெஹ்தி ஹசன் ஆகியோரின் நிகழ்ச்சிகளை நாங்கள் தொகுத்து நடத்துகிறோம். ஆனால் லதா மங்கேஷ்கருக்கு நீங்கள் ஒரு விழாவையும் ஏற்பாடு செய்யவில்லை” எனக் கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது பார்வையாளர்களிடம் இருந்து பலத்த கரவொலியும் கிடைத்தது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். அவர்களின் தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். இந்திய பாதுகாப்புப் படை நடந்திய பதில் தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹபீஸ் சயீத், ஜாகியுர் ரஹ்மான் லக்வி போன்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது.
US Presidential Election 2024: ட்ரம்ப்க்குப் போட்டியாக களமிறங்கத் தயாராகும் இந்திய வம்சாவளி இளைஞர்