தீபாவளிக்கு அடுத்த நாள், இந்தூரின் கௌதம்புராவில் 'ஹிங்கோட் போர்' என்ற நூற்றாண்டு பழமையான திருவிழா நடைபெற்றது. இதில் இரு கிராமத்தினர், ஹிங்கோட் பழத்தின் ஓட்டில் வெடிமருந்து நிரப்பி, ஒன்றையன்று பற்றவைத்து எறிந்து மோதிக்கொண்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு அருகிலுள்ள கௌதம்புரா நகரில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளில், 'ஹிங்கோட் போர்' (Hingot War) எனப்படும் நூற்றாண்டுகள் பழமையான திருவிழா நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தப் பாரம்பரியப் போரில், கௌதம்புரா மற்றும் ருஞ்சி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போரில் துர்ராக்கள் (Turras) மற்றும் கலங்கிகள் (Kalangis) என்று அழைக்கப்படும் இருதரப்பு வீரர்கள் நேருக்கு நேர் மோதினர். காவல்துறையின் பாதுகாப்புடன் இந்தத் திருவிழா நடைபெற்றது.
ஹிங்கோட் போர் திருவிழா
ஆபத்தான இந்தப் போர் திருவிழாவில் 44 பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களில் ஐந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் காவல் ஆய்வாளர் அருண் சோலங்கி தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஹிங்கோட் போர் அரை மணி நேரம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இருப்பினும், இரு தரப்பினரும் எரியும் எரிகுண்டுகளை வீசித் தாக்கினர். பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள், எரியும் 'ஹிங்கோட்களை' (Hingots) கையில் ஏந்தியபடி மோதினர்.
இந்த ஹிங்கோட் போர் தைரியம், பக்தி மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. இதில் வெற்றியாளர்களோ, தோல்வியாளர்களோ இல்லை; போரில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்கிறார்கள். கௌதம்புரா மக்களைப் பொறுத்தவரை, ஹிங்கோட் போர் ஒரு புனிதமான பாரம்பரிய நிகழ்வு.
குண்டாக மாறும் ஹிங்கோட் பழம்!
'ஹிங்கோட்' என்பது ஒரு சாதாரணக் பழம் அல்ல; இது ஒரு இயற்கையான ஆயுதம். ஹிங்கோரியா (Hingoria) மரத்தில் வளரும் இதன் வெளிப்புற ஓடு கடினமானது. இது அறுவடை செய்யப்பட்ட பிறகு, அதன் சதை நீக்கப்பட்டு, ஓடு உலர்த்தப்பட்டுகிறது. பின் அதன் உள்ளே வெடிமருந்து (Gunpowder), நிலக்கரி, கந்தகம் மற்றும் நுண்ணிய இரும்புத் துகள்கள் நிரப்பப்பட்டு, மேலே திரி போன்ற குச்சி பொருத்தப்படுகிறது. திரியைப் பற்றவைத்ததும் அது ஒரு சிறிய ராக்கெட் போல காற்றில் சீறிப் பாயும்.
இந்த ஹிங்கோட் போர் 200 ஆண்டுகளுக்கும் மேல் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் தேவர்களுக்கும் (Gods) அசுரர்களுக்கும் (Demons) இடையே நடந்த போரைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. ஹிங்கோட் போரில் பங்கேற்பது அல்லது அதைக் காண்பதால் தேவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
