குஜராத்தின் டகோர் ரஞ்சோட்ரைஜி கோயிலில் 'அன்னக்கூட்' பண்டிகை கொண்டாடப்படுகிறது, அங்கு சுவாமிக்கு உணவு மலை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. 250 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்த விழாவில் பக்தர்கள் பிரசாதத்தை 'திருடி'ச் செல்வது சிறப்பம்சமாகும்.

குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் மறுநாள் 'அன்னக்கூட்' என்ற என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை டகோரில் உள்ள ரஞ்சோட்ரைஜி பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சுவாமிக்கு 151 மூட்டைகளுக்கும் அதிகமான அன்னக்கூட் பிரசாதம் படைக்கப்பட்டது.

'அன்னக்கூட்' என்றால் 'உணவு மலை' என்று பொருள். இது கடவுளுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரமாண்டமான விருந்தைக் குறிக்கிறது. வைணவ மரபுகளில் இந்தக் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிருஷ்ணரின் கோவர்தனக் குன்று கதை

தொன்மைக் கதைகளின்படி, ஒரு காலத்தில் பிருந்தாவன மக்கள் நல்ல அறுவடைக்காக மழை தெய்வமான இந்திரனை வழிபட்டனர். கிருஷ்ணர் அவர்களை இந்தச் சடங்கை நிறுத்திவிட்டு, கோவர்தனக் குன்றை வணங்கும்படி நம்பவைத்தார். இதனால் கோபமடைந்த இந்திரன், கிராமத்தின் மீது ஒரு பெரிய புயலை ஏவினான். உடனே கிருஷ்ணர், கிராம மக்களுக்கும் அவர்களது கால்நடைகளுக்கும் அடைக்கலம் அளிப்பதற்காக கோவர்த்தன குன்றை தனது சுண்டு விரலால் தூக்கினார்.

பகலிரவாக ஏழு நாட்களுக்குப் பெய்த பலத்த மழைக்குப் பிறகு, இந்திரனின் அகந்தை அடங்கியது, அவர் கிருஷ்ணரிடம் தலை வணங்கினார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, கிராம மக்கள் கிருஷ்ணருக்கும் கோவர்தனக் குன்றுக்கும் ஒரு பெரிய விருந்தை (அன்னக்கூட்) சமைத்துப் படைத்தனர்.

Scroll to load tweet…

திருவிழாவின் 250 ஆண்டு பாரம்பரியம்

டகோர் ஆலயத்தின் நீண்டகாலமாக அன்னகூட் திருவிழா நடக்கிறது. சுற்றியுள்ள 80 கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு அன்னக்கூட் பிரசாதம் வழங்கப்படும். இந்த ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) டகோர் ரஞ்சோட்ரைஜி கோவிலில் 151 மூடை அன்னக்கூட் படைக்கப்பட்டது. இந்த அன்னக்கூட் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். பக்தர்களை எழுத்துப்பூர்வமாக அழைத்து இந்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்னக்கூடில் மகா ஆர்த்தி நடந்த பிறகு பிரசாதம் உட்கொள்ளப்படுகிறது. பின்னர் இந்தப் பிரசாதம் மற்ற பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உட்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

பிரசாதத்தை 'திருடும்' பக்தர்கள்

250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாரம்பரியம் இக்கோவிலில் நடைமுறையில் உள்ளது. “அழைக்கப்படும் பக்தர்கள் வந்து அன்னக்கூட்டை 'திருடி' எடுத்துச் செல்கிறார்கள். மக்கள் அன்னக்கூட்டைத் திருட வரும் ஒரே நாள் இதுதான். அவர்கள் கடவுளின் பிரசாதத்தைத் திருடி உண்கிறார்கள். இதற்குச் சிறப்பான முக்கியத்துவம் உண்டு. பூந்தி, மைசூர் பாகு உள்ளிட்ட பல்வேறு உணவுகள் அன்னக்கூட்டில் அடங்கும். அன்னக்கூட்டைத் திருடும் இந்தப் பாரம்பரியத் திருவிழா பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கோவில் பூசாரி ஜனக் மஹாராஜ் கூறுகிறார்.