தீபாவளி கோலாகலம்..! ரூ.6000 ஆயிரம் கோடிக்கு விற்றுத் தீர்ந்த சிவகாசி பட்டாசு..!
வட மாநிலங்களில் தேவையை பூர்த்தி செய்ய மழை நின்றவுடன் உற்பத்தி மீண்டும் தொடங்கும். இந்த ஆண்டு மாநிலத்தில் சுமார் 15,000 சில்லறை விற்பனை நிலையங்கள் பட்டாசுகளை விற்க உரிமம் பெற்றிருந்தன.

சிவகாசியின் புகழ்பெற்ற பட்டாசுத் தொழில் இந்த தீபாவளியில் சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது . ஆனால் டெல்லி- என்.சி.ஆர் பகுதியில் பட்டாசுகள் மீதான முழுமையான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன் கூறுகையில், தடை வாபஸ் பெறப்பட்டதன் பலன்கள் தெரியத் தொடங்கியுள்ளன. எங்கள் பட்டாசுகளில் குறைந்தது 14%-15% ஐ டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். இது தீபாவளியின் போது குஜராத் போன்ற மாநிலங்களிலும், திருமணங்கள் போன்ற பிற பண்டிகை நிகழ்வுகளிலும் விற்பனை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.
சிவகாசி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால், உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.
தொடர் வெடி விபத்து, தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அதிகாரிகள் ஆய்வு, சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்தது.
ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகைக்கு மொத்த விற்பனை தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 20 வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 300 வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்தன. உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு 20 சதவீதத்துக்கும் மேல் விலை உயர்ந்தது. உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்பனையாகின.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சில்லறை விற்பனை பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்தாலும், விலை உயர்வு மற்றும் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதன் காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் தேவையை பூர்த்தி செய்ய மழை நின்றவுடன் உற்பத்தி மீண்டும் தொடங்கும். இந்த ஆண்டு மாநிலத்தில் சுமார் 15,000 சில்லறை விற்பனை நிலையங்கள் பட்டாசுகளை விற்க உரிமம் பெற்றிருந்தன. சென்னை, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் மழை காரணமாக விற்பனை சற்று குறைந்திருந்தாலும், கிட்டத்தட்ட 90% சரக்குகள் விற்றுத் தீர்ந்துவிட்டன" என தமிழ்நாடு பட்டாசு வர்த்தகர்கள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் கூறினார்.