வீடியோ: விமானியை ஆக்ரோஷமாகத் தாக்கிய பயணி! விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் ஆத்திரம்!
ஞாயிற்றுக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் மிகவும் தாமதமாகியுள்ளன. சில விமானங்கள் 7-8 மணிநேரங்களுக்கு மேல் தாமதித்துள்ளன.
இண்டிகோ விமானம் ஒன்று 13 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானியை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் இருந்து கோவா செல்லும் இண்டிகோ விமானத்தில் (6E-2175) ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானம் பனிமூட்டம் காரணமாக பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
விமானியைத் தாக்கிய பயணியின் பெயர் சாஹில் கட்டாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மேலும் விமான நிறுவனம் சார்பில் அந்த நபர் மீது அதிகாரபூர்வமாக வழக்குப்பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.
வைரலாகப் பரவிவரும் வீடியோவில், மஞ்சள் நிற சட்டை அணிந்த ஒருவர் திடீரென பின்வரிசை இருக்கையில் இருந்து ஓடிவந்து, விமானியைத் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. விமானத்தின் இணை கேப்டன் அனுப் குமார் தாமதம் குறித்த தகவலை பயணிகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொங்கல் விழாவில் இளம்பெண்ணுக்கு தனது சால்வையை அணிவித்துப் பாராட்டிய அளித்த பிரதமர் மோடி!
சம்பவம் நடந்த உடனேயே, அந்தப் பயணி சாஹில் கட்டாரியா விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவுக்கு பதில் அளித்துள்ள பயனர் ஒருவர், "தாமதத்திற்கு விமானி அல்லது கேபின் குழுவினர் என்ன செய்ய முடியும்? அவர்கள் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இவரைக் கைது செய்து, விமானத்தில் பயணிக்க தடை விதிக்க வேண்டும். அவரது படத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அவரது கெட்ட மனநிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் விமானங்களை இயக்குவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட 110 விமானங்கள் தாமதமாகியுள்ளன. ஒரே நாளில் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்ரேடார் 24 தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு விமானமும் 50 நிமிட தாமதம் ஆகியுள்ளன.
வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி நிலவுவது உள்பட விமானம் பரப்பதற்கு பாதகமான வானிலை காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று, ஞாயிற்றுக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் மிகவும் தாமதமாகியுள்ளன. சில விமானங்கள் 7-8 மணிநேரங்களுக்கு மேல் தாமதித்துள்ளன.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான இயக்கம் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளன.
112 வயதில் 8வது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மலேசிய மூதாட்டி!