நியூயார்க்கில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவி சஹாஜா உடுமலா, தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தீ சஹாஜா தங்கியிருந்த வீட்டிற்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. அவர் தூங்கிக்கொண்டிருந்ததால், தீ பரவியதை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் சிக்கினர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வீட்டில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.

இந்த தீ விபத்தில் சஹாஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சஹாஜா உயிரிழந்தார். தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சஹஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சஹாஜாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் தூதரகம் கூறியுள்ளது. ஹைதராபாத்தில் டிசிஎஸ் ஊழியரான உடுமுலா ஜெயகர் ரெட்டி மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியை கோபுமாரிய ஷைலஜாவின் மூத்த மகள் தான் சஹாஜா. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.