உலகின் உயரமான ரயில் பாலத்தில் பொலேரோ கார் ஓட்டி சோதனை!
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய ரயில்வே மஹிந்திரா பொலேரோ காரை பயன்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஈபிள் கோபுரத்தைவிட உயரமான இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், இந்திய ரயில்வே அதனை ஆய்வு செய்யத் தொடங்கியது.
பாலத்தின் ஆய்வுக்காக இந்திய ரயில்வே மஹிந்திரா பொலேரோ கார் ஒன்றை டிராலிகளைப் பயன்படுத்தி தண்டவாளத்தில் இயக்குவதற்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா பொலேரோ கார் 359 மீட்டர் உயரத்தில் உள்ள பாலத்தில் ஓட்டிச் செல்லப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான பாலத்தில் இயக்கப்பட்ட முதல் வாகனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா பொலேரோ செனாப் ரயில் பாலத்தில் இயக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாகவும் போட்டோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது. பொலேரோ ரயில் தண்டவாளத்தில் ஓடுவதையும் மற்ற டிராலிகள் காரைப் பின்தொடர்ந்து செல்வதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.
இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தில் விஷ பாக்டீரியா: WHO எச்சரிக்கை
ரயில் பாலத்தின் தண்டவாளத்தில் ஓடும் வகையில் கார் மாற்றியமைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கார் டயர்களில் சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டதன் மூலம் காரை தண்டாவளங்கள் மேல் ஓட்ட முடிந்திருக்கிறது.
1400 கோடி மதிப்பிலான செனாப் ரயில் பால திட்டம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஏற்கெனவே பல முறை பாதுகாப்பிற்காக சோதிக்கப்பட்டது. இதில் நிலைத்தன்மை சோதனை, அதிவேக காற்று சோதனை, பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய சோதனை, தீவிர வெப்பநிலை சோதனை மற்றும் நீர் மட்ட அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளுக்கான சோதனை ஆகிய நடந்துள்ளன.
ரியாசி நகரத்திலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பாலத்தின் எஃகு மற்றும் கான்கிரீட்டால் ஆன அடிப்பகுதி நவம்பர் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பின் பிரதான வளைவுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி ஏப்ரல் 2021 இல் முடிக்கப்பட்டது. இந்தப் பாலம் மணிக்கு 260 கிமீ வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும். இது 120 ஆண்டுகள் வரை ஆயுள் காலம் கொண்டிருக்கும் என்று இந்திய ரயில்வே கூறுகிறது.
தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!