ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் சாப்பிட பொறுத்தமற்றவை என சமீபத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. 

இதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிக்கு வழங்கப்பட்ட வெஜிடேபிள் பிரியாணியில் பல்லி கிடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரயில்வேயில் வழங்கப்படும் உணவு வகைகள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துவரும் நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

 இது குறித்து பேசிய ரயில்வே வாரிய சேர்மன்  ஏகே மித்தால் “வீட்டில் இருந்தே பயணிகள் உணவை தயார் செய்து எடுத்து வந்து விடுங்கள். வீட்டு உணவை விட தரமான உணவு கிடையாது,” என கூறி உள்ளார். 

 மேலும் பேசிய அவர், ரயிலில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதால் பயணிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் சுமார் 15 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள், ரயில்வே மிகவும் தீவிரமான சவாலை எதிர்க்கொண்டு உள்ளது.

இப்பிரச்சனைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.  இ-கேட்டரிங் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, இ-கேட்டரிங் மூலம் பயணிகள் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.