பின்கோடுக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?
பின்கோடு இலக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும், அவை எப்படி பிரிக்கப்பட்டன என்பதும் அவற்றின் அர்த்தம் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் உலகின் எந்த மூலையில் உள்ள நபரையும் நாம் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பழங்காலத்தில் தகவல் தொடர்புக்கு அஞ்சல் முறை பயன்படுத்தப்பட்டது. மிகவும் பழமையான தகவல் தொடர்பு முறையான கடிதம் அனுப்பும் முறை இந்தியா, எகிப்து, சுமர், ரோம், கிரீஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்தது. ஆனால் இந்த கடிதங்கள் எப்படி சரியான முகவரியை அடைகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அதற்கான பதில் 6 இலக்க பின்கோடு. இந்திய அஞ்சல் சேவையின் PIN குறியீடு ஆகஸ்ட் 15, 1972 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் கொரியர்கள், கடிதங்கள் மற்றும் பிற அஞ்சல் பொருட்களை அனுப்ப 6 இலக்க பின்கோடு எண் பயன்படுத்தப்படுகிறது. பின்கோடு இலக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும், அவை எப்படி பிரிக்கப்பட்டன என்பதும் அவற்றின் அர்த்தம் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பின்கோடு என்றால் என்ன?
PIN என்பதன் விரிவாக்கம் Postal Index Number அதாவது அஞ்சல் குறியீட்டு எண். பின்கோடு முறை 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்தியாவின் அஞ்சல் சேவையால் இடங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தின் அஞ்சல் குறியீடு 6 இலக்கங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு இலக்கமும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை குறிக்கிறது.
பின்கோடு ஏன் தேவைப்பட்டது?
உலக அளவில் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆம்.. நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரே மாதிரியான பெயர்கள் இருந்ததாலும் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டதாலும் அஞ்சல்களை விநியோகிக்கும் செயல்முறை குழப்பமாக மாறியது. எனவே, அஞ்சல் செயல்முறையை எளிதாக்க, பின்கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி நாடு 9 புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பின்கோடுகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஒரு புள்ளி இராணுவ தபால் சேவைக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. தபால் துறையின் படி, நாட்டில் மொத்தம் 19,101 பின்கோடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் பின்கோடு எண் எவ்வாறு செயல்படுகிறது?
அஞ்சல் பின் கோடு எண் மொத்தம் 6 இலக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு இலக்கமும், வெவ்வேறு தகவல்களைக் குறிக்கின்றன. அந்த வகையில் பின்கோடு நம்பரின் முதல் இலக்கமானது அஞ்சல் மண்டலத்தைக் குறிக்கிறது, உதாரணமாக கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு ஆகியவை. 2-வது இலக்கமானது துணைப் பகுதியைக் குறிக்கிறது, மூன்றாவது மண்டலம் அந்த மாவட்டத்தைக் குறிக்கிறது. அதேசமயம், மீதமுள்ள எண்கள், தபால் நிலையத்தின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்குகிறது.
பின்னர், இந்த கடிதங்கள் அல்லது பார்கல்கள், பின்கோடு, கடிதங்கள் மற்றும் பொருட்கள் பின்கோடு பிரிவின் அடிப்படையில் தபால் அலுவலகம் அல்லது கூரியர் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. இங்கிருந்து இவை அனைத்தும் பெறுநரின் முகவரிக்கு நகர்த்தப்படுகின்றன.
பின்கோடு உருவாக காரனமாக இருந்த நபர் யார்?
இந்தியாவில் ஸ்ரீராம் பிகாஜி வேலங்கர் என்பவர் பின்கோடு முறையை அறிமுகம் செய்தார். சமஸ்கிருத அறிஞரான வேலங்கர், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், அஞ்சல் மற்றும் தந்தி வாரியத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். இவர் பின்கோடு எண்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அஞ்சல் மற்றும் கடிதங்களை சிறப்பாகப் பிரிப்பதற்காக நாட்டில் பின்கோடு முறையை செயல்படுத்துவது அவரின் யோசனையாக இருந்தது.
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், தந்தி வாரியத்தின் மூத்த உறுப்பினராகவும் பணிபுரிந்தபோது, இந்திய அஞ்சல் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த ஒரு அமைப்பு தேவை என்பதை அவர் உணர்ந்தார். எபவே பின்கோடு மூலம் அத்தகைய வலுவான அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானலும் பொருட்களை கொண்டு செல்ல வரப்பிரசாதமாக மாறியது.
குறைந்த விலையில் பெங்களூரை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?
ஸ்ரீராம் பிகாஜி வேலங்கரின் பங்களிப்பு அஞ்சல் சேவைகளின் மேம்பாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் சமஸ்கிருதத்தில் 105 புத்தகங்களை எழுதினார். மேலும் அவரின் "விலோம காவ்யா" என்ற நாடகம் தற்போது வரை சமஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு என்று அழைக்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற உலக தபால் தலை கண்காட்சியின் தலைவரான பிகாஜி தனது அசாதாரண படைப்புகள் மற்றும் சாதனைகளுக்காக பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றார்..
இருப்பினும் தற்போது கடிதங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டாலும் பின்கோடின் முக்கியத்துவம் மட்டும் இன்னும் மாறவில்லை. அனைத்துமே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் நிலை வந்துவிட்டாலும் பின்கோடு இருந்தால் மட்டும் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்களை வந்து சேரும். எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்கோடு எண்ணின் தேவை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

