லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தற்போது அரசு ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா vs மாலத்தீவு என்று மாறியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு, அப்படியே இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு சென்று இருந்தார். பின்னர் கேரளா சென்றார். இதையடுத்து, லட்சத்தீவில் மோடி எடுத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. அந்தத் தீவின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் நோக்கத்திலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்திலும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் கேந்திரமாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலரும் லட்சத்தீவு செல்வோம் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
ஆனால், இதற்குப் பின்னால் பெரிய அளவில் தனக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதையும் பிரதமர் மோடி நினைத்து இருக்க வாய்ப்பில்லை. அறிந்தும் இருக்கலாம். மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பிரதமர் மோடியை கேலியாக சமூக வலைதளங்களில் சித்தரித்து இருந்தனர். அந்த மூன்று அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், அப்துல்லா மசூர் மஜித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
பின்வாங்கிய மாலத்தீவு அரசு:
வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை தங்கள் அமைச்சர்கள் பதிவிட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மாலத்தீவு அரசு பின்வாங்கிக் கொண்டது. இந்த மூன்று அமைச்சர்கள் மீதும் அதிபர் முகமது முய்சு தமைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இருதரப்பிலும் பெரிய அளவில் அரசு ரீதியிலான சிக்கல்களை உருவாக்கி உள்ளன.
மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மசூர் மஜித், பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவுப் பயணம், மாலத்தீவில் இருந்து இந்தியாவின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று கூறி இருந்தார். சுற்றுலாத் துறையில் லட்சத்தீவு கடற்கரைகளை சுற்றுலாத் தலமாக இந்தியா மேம்படுத்தி வருவதாக மஜித் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியை "கோமாளி" என்றும் "இஸ்ரேலின் கைப்பாவை" என்றும் ஷியுனா குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சமூக வலைதளத்தில் இருந்து தனது பதிவை ஷியுனா நீக்கினார்.
மோடியின் ராஜதந்திரம்:
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருக்கும் என்றே குறிப்பிட்டு இருந்தார். மாலத்தீவின் சுற்றுலாவுக்கு எதிராக இந்தியா ஒரு பிரச்சாரத்தை தொடங்கியதாகக் கூறி, திவேஹி மொழியில் பரபரப்பான தலைப்புச் செய்திகளை மாலத்தீவு ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு தீவுகளுக்கு இடையிலான ஒப்பீடுகளை சமூக பயனாளிகள் எழுதத் தொடங்கினர். இது, இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்ப அடித்தளமாக இருந்தது.
மாலத்தீவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முகமது முய்சு தலைமையிலான அரசு பதவியேற்றுக் கொண்டது. அப்போது இருந்தே, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தது. சமூக வலைதளங்களில் இந்தியர்களுடன் சண்டையிடும் அளவிற்கு இந்தப் பிரச்சனை சென்றது.
பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு
லட்சத்தீவை உரிமை கொண்டாடும் மாலத்தீவு நெட்டிசன்கள்:
லட்சத்தீவை சுற்றுலா தளமாக இந்தியா முன்னிறுத்துகிறது என்ற நோக்கத்தில் மாலத்தீவைச் சேர்ந்த ஆளும் கூட்டணி கட்சிகளான மாலத்தீவு முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் இரண்டும், தங்களது தீவை முன்னிறுத்தும் வகையில் '#Visit Maldives'என்ற ஹெஸ்டேக்கை பயன்படுத்தின. இத்துடன் மாலத்தீவின் ஓட்டல்கள், பீச்சுகள்,ரெசார்ட்கள் ஆகியவற்றை விளம்பரப்படுத்தியது. மேலும் சில மாலத்தீவைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல லட்சத்தீவு. மாலத்தீவுக்கு சேர்ந்தது என்ற கருத்துக்களை பகிரத் தொடங்கினர்.
''எங்களுடன் இந்தியா போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்கள் எப்படி வழங்க முடியும்? அவர்களால் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்க முடியும். அறைகளில் நிரந்தரமான துர்நாற்றம் மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும்'' என்று மாலத்தீவு முற்போக்குக் கட்சி உறுப்பினரும் செனட் உறுப்பினருமான ஜாஹித் ரமீஸ் இழிவாக பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவுகள் மற்ற சமூக ஊடக பயனர்களையும் இந்தியர்கள் மற்றும் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக இனவெறி தாக்குதல் கருத்துகளை வெளியிட தூண்டியது. இதுவே இரண்டு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் புக் செய்திருந்த இந்தியர்கள் பலரும் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.
இந்தியா vs மாலத்தீவு:
மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் புதிதல்ல. 2020 ஆம் ஆண்டில், 'இந்தியா அவுட்' என்ற பிரச்சாரம் மாலத்தீவில் தொடங்கியது. பின்னர் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளுடன் சொற்களையும் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பினர். 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், 2018 மற்றும் 2023 க்கு இடையில் மாலத்தீவின் அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் அரசு இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தன. முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமும் வெளிப்படையாக இந்தியாவுக்கு எதிராக 'இந்தியா அவுட்' பிரச்சாரத்தை முன் வைத்து இருந்தார்.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு முய்சு அரசு ஆட்சிக்கு வந்தபோது, கூட்டணி கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டது. 2023 டிசம்பரில், இந்திய அதிகாரிகளுடனான COP28 காலநிலை உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மாலத்தீவிற்கு வழங்கப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தை இயக்கவும் நிர்வகிக்கவும் மாலத்தீவு வநதிருந்த தனது வீரர்களைத் திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக முய்சு அரசு தெரிவித்து இருந்தது.
சீனாவுடன் மாலத்தீவு நெருக்கம்:
இந்த நிலையில், முய்சு அரசு சீனாவுடன் நெருக்கத்தை அதிகரிக்க விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு ஜனவரி 8 முதல் 12 வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் செய்ய உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அரசியல் கருத்து வேறுபாடுகளும் தலைதூக்கியுள்ளது.
கூகுளில் லட்சத்தீவை தேடும் சுற்றுலாப் பயணிகள்:
தற்போது இந்த அரசியல் பின்னடைவுகளுக்கு நடுவே, லட்சத்தீவு செல்வதற்கு கூகுளில் தேடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,400 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடி, லட்சத்தீவுக்கு சென்று சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டதில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்பதையும், சீனா பக்கம் சென்று கொண்டு இருக்கும் மாலத்தீவுக்கு சவுக்கடி கொடுப்பதற்கு என்பதையும் உலகம் உணர்ந்து கொண்டுள்ளது.
