indian girl won world beauty contest in china

உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி, அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்று போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார் இந்தியா சார்பில் பங்கேற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

இதில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார்.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். அதன்பின்னர், 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.



இந்நிலையில், உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் , வாழ்த்துக்கள் மனுஷி சில்லார். உங்கள் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.