கடந்த சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக  தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக 6 தீர்மானங்களை முன்வைத்தனர். தீர்மானம் மீதான விவாதம் 29ம் தேதி (நேற்று) நடக்கும் என்றும், தீர்மான மீதான வாக்கெடுப்பு அதற்கு அடுத்த நாள் (இன்று) நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் எடுக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தின் இயல்பு மற்றும் தாக்கங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின்  தவறான புரிதல்களை கலையும் நோக்கில் மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு பலன் கிடைத்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதேசமயம் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ஒத்திவைக்ககோரி மத்திய வலதுசாரி அமைப்பான ஐரோப்பிய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கோரிக்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அவையில் 484 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 271 பேர் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 199 பேர் ஒத்திவைப்பதற்கு எதிராக வாக்களித்தனர். 13 பேர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து  பெரும்பான்மையான உறுப்பினர்கள்  ஆதரவு காரணமாக, தீர்மானம் மீதான வாக்கெடுப்பை மார்ச் மாதத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒத்திவைத்தது.