சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 24,81,253 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 170,435 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி மனித குலத்திற்கு பெரும் நாசங்களை விளைவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்க்கு மருத்து எதுவும் கண்டுபிடிக்கபட வில்லை. எனினும் ஹைட்ராக்ஸிக்ளோரோ குயினை கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என அண்மையில் பரிந்துரைக்கப்பட்டது. அது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இந்தியாவிடம் மருந்து ஏற்றுமதிக்காக கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று இந்தியா பல்வேறு நாடுகளுக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வருகிறது. இதனிடையே மாலத்தீவு நாட்டிற்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் மருத்துவ குழு ஒன்றை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.

 

இக்கட்டான சூழ்நிலையில் மாலத்தீவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று தொடர்பு கொண்டு பேசி உறுதியளித்தாா். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”இந்தியா-மாலத்தீவு இடையே எப்போதும் ஒரு சிறப்பு பிணைப்பு உண்டு. கொரோனா நோய்த்தொற்று பிரச்னையால் மாலத்தீவு எதிா்கொண்டுள்ள சுகாதார, பொருளாதார பிரச்னைகளுக்கு இந்தியா கண்டிப்பாக உதவும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாலத்தீவுக்கு இந்தியா நிச்சயமாக துணை நிற்கும். இது தொடா்பாக அந்நாட்டு அதிபருடன் பேசியபோது நான் உறுதியளித்துள்ளேன். அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழு ஒன்றை ஏற்கெனவே அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவில் இதுவரை 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.