அமெரிக்கா, இந்தியாவுக்கு 93 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சக்திவாய்ந்த ஜாவலின் ஏவுகணை அமைப்பு, எக்ஸ்காலிபர் துல்லிய குண்டுகள் வழங்கப்படும்.
அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் பெரிய முன்னேற்றமாக, அமெரிக்கா இந்தியாவுக்கு இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களின் விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்த மதிப்பு 93 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.775 கோடி) ஆகும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இராணுவத்துக்கு சக்திவாய்ந்த ஜாவலின் ஏவுகணை அமைப்பு மற்றும் எக்ஸ்காலிபர் துல்லிய குண்டு (Excalibur Artillery Projectiles) கிடைக்க உள்ளது. அமெரிக்காவின் Defence Security Cooperation Agency (DSCA) வெளியிட்ட அறிவிப்பில், ஜாவலின் ஏவுகணை அமைப்பின் விற்பனைக்கு 45.7 மில்லியன் டாலர் மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 100 FGM-148 ஜாவலின் ரவுண்டுகள், 1 'fly-to-buy' சோதனை ஏவுகணை, 25 கட்டளை வெளியீட்டு யூனிட்கள், பயிற்சி சிமுலேட்டர் ரவுண்டுகள், உதிரிப் பாகங்கள் மற்றும் முழு ஆயுள் பராமரிப்பு ஆதரவு உள்ளிட்டவற்றை கேட்டிருந்தது. DSCA தனது அறிக்கையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் உயர்த்தும் என்றும், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவிற்கு வலு சேர்க்கும் என்றும் கூறினார்.
குறிப்பாக, பிராந்திய பாதுகாப்புத் துறையில் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்கவும், அமெரிக்கா-இந்தியா இடையேயான ஸ்ட்ராட்டஜிக் உறவை வலுப்படுத்தவும் இது உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனுடன், அமெரிக்க வெளியுறவுத் துறை Excalibur Projectiles எனப்படும் துல்லியத்திற்காக பிரபலமான குண்டுகளை இந்தியாவுக்கு விற்கும் திட்டத்தையும் அங்கீகரித்துள்ளது.
இதன் மதிப்பு 47.1 மில்லியன் டாலர். இந்த அறிவிப்பில், இந்த உபகரணங்கள் இந்தியாவின் துல்லியத் தாக்குதல் திறனை அதிகரிக்கும். மேலும், இந்த விற்பனை ராணுவ சமநிலையை பாதிக்காது என்றும் DSCA தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, இது இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை மேம்படுத்தி, அமெரிக்காவுடன் உள்ள பாதுகாப்பு கூட்டுறவையும் மேலும் வலியுறுத்தும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.


