வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் அமையும்போது விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமமானதாகவும், சமநிலையானதாகவும் அமையும்போது விரைவில் ஒரு "நல்ல செய்தியை" நீங்கள் கேட்பீர்கள் என்று அவர் செவ்வாயன்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோ-அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்தியா-அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

விவசாயிகள், மீனவர்கள் நலன்

"இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒரு செயல்முறை. ஒரு நாடாக, இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில்களின் நலன்களைக் காக்க வேண்டும்" என்று அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவாகிய நாம், நம் தேசத்தின் நலன்களையும், நமது பங்குதாரர்களின் நலன்களையும் உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழில்கள் போன்ற உணர்வுப்பூர்வமான துறைகளுடன் அதை சமநிலைப்படுத்த வேண்டும். சரியான சமநிலையை நாம் அடையும்போது, இந்த ஒப்பந்தத்தின் முடிவுகளைப் பற்றி நீங்கள் உறுதியாகக் கேட்கலாம். இந்த ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமமானதாகவும், சமநிலையானதாகவும் மாறும் போது, நீங்கள் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்" என்று குறிப்பிட்டார்.

இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கி, இதுவரை ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன.

நட்புறவில் குழப்பமில்லை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களின் மீது 50% கூடுதல் வரி விதித்ததிலிருந்து இரு நாடுகளின் உறவில் சிறிது பதற்றம் நிலவியது. குறிப்பாக, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் இறக்குமதி வரியும் இதில் அடங்கும்.

இந்த உறவு குறித்து பியூஷ் கோயல் நகைச்சுவையுடன் குறிப்பிடுகையில், "குடும்பத்தில் சில சமயங்களில் சிறிய சலசலப்புகள் இருப்பது சகஜம்தான். இரு நாடுகளின் உறவில் எந்தவித இடைவெளியும் இருப்பதாக நான் நம்பவில்லை. இது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான, மிகவும் மூலோபாய உறவாகவே தொடர்ந்து நீடிக்கிறது" என்றார்.

எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தம்

இந்தியாவுடனான நட்பு நீடித்தது என்பதைக் குறிக்கும் வகையில், அமெரிக்காவுடனான எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தம் ஒரு பல ஆண்டு ஒப்பந்தமாக இருக்கலாம் என்றும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

"நாங்கள் ஆண்டுதோறும் 22 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்வதற்கான ஒரு பெரிய நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். எனவே இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் வணிகத்தை விரிவாக்க நாங்கள் இருவரும் சமமாக உறுதிபூண்டுள்ளோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

500 பில்லியன் டாலர் வர்த்தகம்

தற்போது சுமார் 191 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை, 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதே முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் இலக்காகும். அமெரிக்கா தரப்பில் பாதாம், பிஸ்தா, ஆப்பிள், எத்தனால் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றுக்கு அதிக சந்தை அணுகலைக் கோருகிறது.

கடந்த 2024-25 நிதியாண்டில் அமெரிக்கா நான்காவது ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக நீடித்தது குறிப்பிடத்தக்கது.