இந்தியா தனது மேம்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையான 'நீண்ட கால ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை' (ET-LDHCM) சோதனையை மேற்கொள்ள தயாராகி வருகிறது. மாச் 8 வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணை, சுமார் 1,500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
நாட்டின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்தியா தனது மேம்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையான 'நீண்ட கால ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை' (Extended Trajectory-Long Duration Hypersonic Cruise Missile - ET-LDHCM) சோதனையை மேற்கொள்ள தயாராகி வருகிறது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்தியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகவும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும்.
மாச் 8 வேகம் (Mach 8 Speed) - இதுவரை இல்லாத உச்சம்:
'விஷ்ணு திட்டம்' (Project Vishnu) கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, அதிகபட்சமாக மாச் 8 (Mach 8) வேகத்தில் (மணிக்கு சுமார் 11,000 கி.மீ) பயணிக்கும் திறன் கொண்டது. மாச் 8 (Mach 8) என்பது ஒலியின் வேகத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும். இந்த வேகம், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்க இந்தியாவின் திறனை கணிசமாக மேம்படுத்தும்.
மாச் 5-க்கு மேல் செல்லும் ஏவுகணைகள் ஹைப்பர்சோனிக் என வகைப்படுத்தப்படுகின்றன. மாச் 8 வேகத்தில் பயணிக்கும் ET-LDHCM, எந்த ஒரு ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டால், ஆசியாவிலும் துணைக்கண்டத்திலும் சக்தி சமநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:
சுமார் 1,500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ET-LDHCM, 2,000 கிலோ எடை வரையிலான சாதாரண மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக, இந்த ஏவுகணையில் ஒரு ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது எரிபொருளை எரிப்பதற்காக வளிமண்டலத்திலிருந்து காற்றை இழுத்து, நீண்ட காலத்திற்கு ஹைப்பர்சோனிக் தரத்தைப் பேணுவதற்குப் பங்களிக்கிறது.
ஓர் ஆண்டிற்குள் இரண்டாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை:
இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பயணிக்கும், இது ரேடார்களை ஏமாற்ற உதவும் மற்றொரு முக்கிய அம்சமாகும். மேலும், இது பறக்கும்போதே சூழ்ச்சி செய்யும் திறனையும் கொண்டிருக்கும். அதன் வெப்ப-எதிர்ப்பு உலோக உடல், அதன் தாங்கும் திறனை 2,000 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கிறது.
நவம்பர் 2024 இல் இந்தியாவின் முதல் வெற்றிகரமான நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு ஒரு வருடத்திற்குள் இந்த குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்கிறது. இது இந்தியாவுக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்க வழிவகுக்கும். அந்த ஏவுகணை 1,500 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் கொண்டதாகவும், மாச் 5-ஐ தாண்டிய வேகத்தை எட்டியதாகவும் குறிப்பிடத்தக்கது.
