பாகிஸ்தானில் 50 கிலோமீட்டர் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த நிலையில் அமெரிக்காவின் பாணியில் அடுத்த திட்டத்திற்கு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 14ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்து வருவதோடு எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தை வருகிறது. இந்திய விமானங்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.  

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை மீறிய பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காக பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இதனால் இரு நாட்டு எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அமைச்சரான அருண் ஜெட்லி கூறுகையில், எல்லையில் பதற்றம், நீடிக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதே போன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயார். பின்லேடனை பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்தது போல இந்தியாவும், பாகிஸ்தானுக்குள் நுழைய தயார்’’ என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் மோடி விமானப்படை தளபதியுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாகிஸ்தான் மீது மீண்டும் பலமான தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற பதற்றம் நிலவி வருகிறது.