இந்தியாவில் பெருகிவரும் மின்னணு கழிவுகளை (e-waste) கையாள, இந்திய அரசு ஒரு புதிய சுழற்சி பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இது பாதுகாப்பான மறுசுழற்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மின்னணுத் துறையில் மறுசுழற்சியை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இதற்கான சுழற்சி பொருளாதாரத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உலக சுற்றுச்சூழல் வசதியும் (GEF) ஐ.நா. மேம்பாட்டுத் திட்டமும் (UNDP) ஆதரவு அளிக்கின்றன.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கழிவுப் பிரிவுகளில் ஒன்றான மின்னணு கழிவுகளை (e-waste) சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாப்பான முறையில் கையாளுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் அபாயகரமான பொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பது, மதிப்புமிக்க வளங்களை மீட்பது மற்றும் இரண்டாம் நிலை மின்னணு மூலப்பொருட்களை அதிக அளவில் கிடைக்கச் செய்வது ஆகியவற்றை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

மின்னணு கழிவுகள் மேலாண்மை

உலகிலேயே அதிக மின்னணு கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் கழிவில் 80 சதவீதத்திற்கும் மேல், பாதுகாப்பற்ற முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனால், மறுசுழற்சி வேலைகளைச் செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளின் பாதிப்பு ஏற்படுகின்றன.

இந்தியாவில் குப்பைகளில் மின்னணு கழிவுகள் (e-waste) மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இதில் அபாயகரமான பொருட்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் மின்னணுக் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது.

மின்னணு கழிவுகளை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் கையாளுவது, பழைய பொருட்களில் இருந்து பயனுள்ள உலோகங்கள் மற்றும் பொருட்களை மீண்டும் பிரித்தெடுப்பது, அபாயகரமான ரசாயனங்கள் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ளன.

அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், “இந்தத் திட்டம் மிகச் சரியான நேரத்தில் வந்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இல்லாத வகையில் பொருட்களை வடிவமைக்கவும் (eco-design), சிறப்பாக மறுசுழற்சி செய்யவும் உதவும். இதனால் நாம் சுயசார்பு அடைவோம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், மக்களின் ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றார்.

“பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழலைக் காப்பதும் சமமாக இருக்க வேண்டும். இந்தத் திட்டம் அரசு மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்படும். இது வளங்கள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் உதவும். இதன் மூலம், பாதுகாப்பான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்” என ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் இந்தியப் பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி தெரிவித்துள்ளார்.

நிதி உதவி மற்றும் பலன்கள்

மின்னணு துறையில் சுறுற்சி பொருளாதாரத் திட்டத்திற்காக 120 மில்லியன் டாலர் (சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல்) முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் GEF-ன் பங்களிப்பு 15 மில்லியன் டாலர். இந்த நிதி, சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவது, பாதுகாப்பான மறுசுழற்சி மையங்களை அமைப்பது போன்றவற்றுக்குப் பயன்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 6,400 பேர் நேரடியாகப் பயனடைவார்கள். சுற்றுச்சூழலில் கலக்கக்கூடிய 8,000 டன் நச்சு உலோகங்கள் தடுக்கப்படும். 6 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான மாசுபாடு குறையும்.

இந்தியா எடுக்கும் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக அமையும் என்று GEF-ன் தலைவர் கார்லோஸ் மானுவல் ரோட்ரிகஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.