இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல், தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இந்தியாவில் தினமும் 9000க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகின்றன. இதுவரை இந்தியாவில் 2,40,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில், 6700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் தான் உச்சபட்ச பாதிப்பு. மகாராஷ்டிராவில் 80,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 2,849 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் 30,152 பேரும் டெல்லியில் 26,334 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்த காலத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், ஊரடங்கும் தளர்த்தப்பட்டுவிட்டது. அதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

உலகளவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை நெருங்கிவிட்டது. அமெரிக்கா தான் சுமார் 20 லட்சம் பாதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதிப்புடன் பிரேசில் இரண்டாமிடத்தில் உள்ளது. 4 லட்சத்து 59 ஆயிரம் பாதிப்புகளை கொண்ட ரஷ்யா மூன்றாமிடத்திலும் ஸ்பெய்ன் நான்காமிடத்திலும் பிரிட்டன் ஐந்தாமிடத்திலும் உள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய இத்தாலியை, பின்னுக்குத்தள்ளி, 2,40,932 பாதிப்புகளுடன் இந்தியா 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரத்தில் 10 இடத்துக்குள் நுழைந்த இந்தியா, தற்போது மிகவேகமாக முன்னேறுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மற்ற நாடுகளை விட இறப்பு விகிதம் குறைவு. ரஷ்யா மட்டுமே இறப்பு விகிதத்தில், இந்தியாவை விட சிறந்து விளங்குகிறது. ரஷ்யாவில் 4 லட்சத்துக்கு 59 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,725 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.