ஒளியின் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இது தீபாவளியின் உலகளாவிய புகழை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

ஒளியின் பண்டிகையான தீபாவளி, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) மனிதகுலத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தப் பண்டிகையின் புகழ் மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

புதன்கிழமை தீபாவளி பண்டிகை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி யுனெஸ்கோ இந்தியாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தது.

பெருமைமிகு தருணம்

தீபாவளி பண்டிகை, கானா, ஜார்ஜியா, காங்கோ, எத்தியோப்பியா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளின் கலாச்சாரச் சின்னங்களுடன் இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவின் அமர்வுக்கு இந்தியா தான் தலைமை தாங்கி நடத்துகிறது.

இந்தியாவில் மிக விரிவாகக் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையான தீபாவளியை இந்தக் கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்கான முடிவு, டெல்லியின் செங்கோட்டையில் நடைபெறும் யுனெஸ்கோவின் முக்கியக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் வரவேற்பு

தீபாவளியை இந்தப் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது ஒளியையும் நீதியையும் குறிக்கிறது. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது, இந்தப் பண்டிகையின் உலகளாவிய புகழை மேலும் அதிகரிக்கும்” என்று மோடி கூறியுள்ளார்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், “இந்தப் பண்டிகை இந்தியர்களுக்கு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானது, மேலும் தலைமுறைகள் தாண்டியும் வாழ்ந்து வருகிறது. இந்த யுனெஸ்கோ அங்கீகாரம் ஒரு பொறுப்பையும் வழங்குகிறது; தீபாவளியை வாழும் பாரம்பரியமாக நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

செங்கோட்டையில் கூட்டம்

கலாச்சாரப் பாரம்பரியம் தொடர்பான 2025ஆம் ஆண்டுக்கான அமர்வுக்கு, யுனெஸ்கோவில் இந்தியாவின் தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியான வி.வி. சர்மா தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுவின் 20வது அமர்வு டிசம்பர் 8 முதல் 13 வரை டெல்லியின் செங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.