1999ம் ஆண்டு மே-ஜூலை காலக்கட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான கார்கிலுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை விரட்ட, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு, ஆபரேஷன் விஜய் என்ற திட்டத்தை முன்னெடுத்தது. அந்த போரில் பாகிஸ்தான் வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டியடித்தது இந்திய ராணுவம். இந்த போரில் இருதரப்பிலுமே வீரமரணங்கள் ஏற்பட்டன. 

பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்திய வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் விதமாக கார்கில் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

கார்கில் போர் வெற்றி தினத்தின் 21ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டுவிட்டரில், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதேபோல, ராஜ்ய சபா எம்பியும், கார்கில் போர் வெற்றி தினம் அனுசரிக்கப்படுவதற்கு காரணமானவருமான ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகரும் அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்ந்தார். 

இந்த சிறப்பான தினத்தில், கார்கில் போர் நினைவு தினம்(கார்கில் விஜய் திவாஸ்) அனுசரிக்கப்படுவதற்கு தான் காரணமாக இருந்ததையும், ராஜீவ் சந்திரசேகர் நினைவுகூர்ந்துள்ளார். 

1999ம் ஆண்டு ஜூலை மாதம் கார்கில் போரில் இந்தியா வென்றது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தவரை, கார்கில் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2009 வரை கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படவில்லை. 

அதன்விளைவாக, கார்கில் போரில் நாட்டுக்காக வீரரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதை சுட்டிக்காட்டி, கார்கில் போர் நினைவு தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்க வேண்டும் என்று ராஜீவ் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதன்பின்னர் இதுகுறித்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே.அந்தோனிக்கு கடிதமும் எழுதியிருந்தார் ராஜீவ் சந்திரசேகர். ராஜீவ் சந்திரசேகரின் தொடர் வலியுறுத்தலின் விளைவாக, 2010ம் ஆண்டு கார்கில் போர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. ராஜீவ் சந்திரசேகரின் தொடர் வலியுறுத்தலையடுத்து, கார்கில் நினைவுதினத்தை அனுசரிப்பதாக, அவருக்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

இதையடுத்து 2010லிருந்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக அனுசரிக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றனர்.