ஆபரேஷன் காவேரி ஆரம்பம்! சூடானில் இருந்து இந்தியா திரும்ப 500 இந்தியர்கள் ரெடி!
உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அத்துறையின் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். சுமார் 500 இந்தியர்கள் சூடானை துறைமுகத்தை அடைந்து, நாடு திரும்ப தயார்நிலையில் உள்ளனர். இந்த மீட்புப் பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சூடான் துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்தியர்களின் இரண்டு புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ஜெய்சங்கர், "சூடானில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடந்து வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர். மேலும் பலர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கப்பல் மற்றும் விமானங்கள் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர தயாராக உள்ளன. சூடானில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதி பூண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு நான்கு வழிச்சாலை: கிராபிக்ஸ் படங்கள் வெளியீடு
ஞாயிற்றுக்கிழமை, இந்திய விமானப்படையின் இரண்டு C-130J விமானங்கள் ஜெட்டாவில் தயார் நிலையில் இருப்பதாகவும், கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளதாகவும் வெளியுறவத்துறை அறிவித்திருந்தது.
இந்தியாவைப் போலவே பல்வேறு நாடுகள் சூடானிலிருந்து தங்கள் நாட்டவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில், பிரான்ஸ் அரசு இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை சூடானில் இருந்து வெளியேற்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனிக்கிழமையன்று, பல நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியா அரசால் மீட்கப்பட்டு அந்நாட்டை அடைந்தனர். அவர்ளில் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். சவுதி அரேபியாவால் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று இந்தியர்கள் சவுதி அரேபிய விமான நிறுவனத்தின் பணியாளர்கள் ஆவர். கடந்த வாரம் சூடானில் சண்டை தொடங்கியபோது அவர் பணிபுரியும் விமானம் தாக்கப்பட்டது.
பிரதமர் மோடியைக் கடவுளாகக் கருதுவது மோசம் அல்ல: முன்னாள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு