சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு நான்கு வழிச்சாலை: கிராபிக்ஸ் படங்கள் வெளியீடு
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு நான்கு வழிச்சாலை திட்டத்தின் கிராபிக்ஸ் படங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் வெளியீட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு நான்கு வழிச்சாலை குறித்த கிராபிக்ஸ் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. "இந்தத் திட்டம் முடிவடைந்தால், சென்னை துறைமுகத்தின் கையாளும் திறன் இரட்டிப்பாகும் எனவும், துறைமுகத்துக்குச் செல்லும் வாகனங்களின் பயண நேரம் ஒரு மணிநேரம் வரை குறையும்" என அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.
இந்த ஈரடுக்கு மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்குகிறது. அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், நுங்கம்பாக்கம், மேத்தாநகா் (அமைந்தகரை), அரும்பாக்கம், கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயில் வரை போகிறது.
ஈரடுக்கு உயா்மட்ட சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுா் வாகனங்கள் செல்லும். 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மேல் அடுக்கில் துறைமுகத்திற்குச் சென்றுவரும் கனரக வாகனங்களுக்கான சாலையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரவாயல் சிவானந்தா சாலையிலிருத்து கோயம்பேடு வரை 20.56 கி.மீ. தொலைவுக்கு இப்பாலம் அமைய உள்ளது. ரூ.5,800 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் திட்டத்துக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.