நீலக்கொடி சான்றிதழ் என்பது, மொத்தம் 33 கூறுகளை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்து, தூய்மையான சுற்றுச்சூழலை கொண்ட கடற்கரைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சான்றிதழ். அந்த 33 கூறுகளில், சுற்றுச்சூழல் கல்வி, நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகின்றன.

இந்தியா சார்பில், குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டாமன் மற்றும் டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோட் மற்றும் பதுபித்ரி, கேரளாவை சேர்ந்த கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசா மாநிலத்தின் கோல்டன் பீச் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபரை சேர்ந்த ராதாநகர் கடற்கரை ஆகிய 8 கடற்கரைகளும் நீலக்கொடி சான்றிதழை பெற பரிந்துரைக்கப்பட்டன.

தூய்மையான கடற்கரைகளை தேர்வு செய்து, நீலக்கொடி சான்றிதழுக்கு அங்கீகரிக்கும் சர்வதேச ஜூரியில், ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம், ஐ.நா உலக சுற்றுலா அமைப்பு, டென்மார்க்கை சுற்றுச்சூழல் கல்விக்கான என்.ஜி.ஓ ஃபௌண்டேஷன் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள் இருப்பார்கள்.

அந்தவகையில், இந்தியாவை சேர்ந்த மேற்குறிப்பிட்ட 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை பெற்ற முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. 

இது ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படக்கூடிய தருணம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் பெருமை தெரிவித்துள்ளார்.