இந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை தடை செய்தது. அதன்பின் மே 25-ந்தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகைகள் பின்பற்றி உள்நாட்டு பயணிகள் விமான சேவை மட்டும் தொடங்கியது.

ஆனால் சர்வதேச விமான சேவை தொடங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்கும்போது  விமான போக்குவரத்துக்கான தடையும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.