கொரோனாவால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா ஆறரை லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியதுடன், உலகளவில் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்குகிறது. 

கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்தியா, சீனாவின் அத்துமீறல்களை முறியடிப்பது, இந்திய பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு பொருளாதார ஊக்குவிப்பு, வெளியுறவுக்கொள்கை என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. 

அந்தவகையில், கொரோனா பீதிக்கு மத்தியில் 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தோனேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரபாவோ சுபியாண்டோ இந்தியாவிற்கு நேற்று வந்தார்.  

இந்நிலையில், இன்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்தோனேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரபாவோ இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடந்தது. ராணுவ உயரதிகாரிகளும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது, பிராந்திய ரீதியான விவகாரங்கள், பாதுகாப்பு விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது, ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருதரப்புக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது என்று இரு பாதுகாப்புத்துறைகளும் அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா - இந்தோனேஷியா இடையே பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நாரவெனெ, கடற்படை தளபதி கரம்பீர் சிங் மற்றும் விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். படௌரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.