income tax return tamilnadu third place

நாட்டில் மொத்தம் 6.83 லட்சம் நிறுவனங்கள் பான்கார்டு எண் வைத்துக்கொண்டே வருமான வரிரிட்டன் தாக்கல் செய்யாமல் அரசை ஏமாற்றி வருகின்றன. இதில் தமிழக மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் அவையில் நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், “ கடந்த 5 ஆண்டுகளாக பான் கார்டு எண் வைத்து இருந்தும், வருமான வரி செலுத்தாமல் தப்பித்து வரும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ம் ஆண்டு 4.09 லட்சத்தில் இருந்து 2016-17ம் ஆண்டு அது 6.83 லட்சமாக உயர்ந்துள்ளது.

டெல்லியியில் அதிகபட்சமாக 1.44லட்சம் நிறுவனங்களும், அடுத்தார்போல் மும்பையில் 94 ஆயிரத்து 155 நிறுவனங்களும் பான் எண் வைத்துக்கொண்டு வருமானவரி செலுத்தாமல் இருக்கின்றன. இதில் தமிழகத்தில் 63 ஆயிரத்து 567 நிறுவனங்கள் பான்கார்டு வைத்துகொண்டு வரிசெலுத்துவதில்லை. அதைத்தொடர்ந்து மேற்குவங்காளம், சிக்கம் மாநிலங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வருமானவரித்துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், நோட்டாஸ் அனுப்பப்பட்ட பின், ஏராளமான நிறுவனங்கள் தங்கள் பதிவை ரத்து செய்துள்ளன’’ என்றார்.