Asianet News TamilAsianet News Tamil

நாடு முழுவதும் 50 வங்கிகளில் அதிரடி சோதனை

income tax-raid-bank
Author
First Published Dec 8, 2016, 9:47 AM IST


பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நிதிக்குற்றங்களை தடுக்கும் வகையில், நாடுமுழுவதும் 50-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ஹவாலா, மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் வங்கிகளில் குவிந்தனர். ரூபாய் மாற்றுவதற்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், சில வங்கிகள் முறைகேடாக பலருக்கு பணத்தை மாற்றி தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

income tax-raid-bank

கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றுவதற்காக பல குறுக்குவழிகளில் செயல்பட்டு வருகின்றனர். அதனைத் தடுக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் நடந்த முறைகேடுகள் குறித்துக் கண்டறிய அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் நேற்று ஒரே நாளில், 50 வங்கிகளில் குறைந்தபட்சம் 10 தனியார் வங்கிகளில் அமலாக்கப்பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கு,  வங்கிக் கணக்கு தணிக்கையாளர்களுடன் சென்று பணப்பரிமாற்ற ஆவணங்கள், கணக்கு வழக்குகளை, அமலாக்கப்பிரிவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்தது. அப்போது, இந்த நகரங்களில் இருக்கும் வங்கிகளில் அதிகபட்சமாக எவ்வளவு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன?,  யார் கணக்கில் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டது?, சந்தேகத்துக்கு இடமான வங்கிக்கணக்குகள் ஆகியவற்றை குறிவைத்து ஆய்வு செய்யப்பட்டது.

income tax-raid-bank

இது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ நவம்பர் 8-ந்தேதிக்கு பின், தயார் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம். இந்த ஆய்வின் போது, வங்கிகளின் வழக்கமான பணிகள், வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படக்கூடாது என ஆய்வுசெய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக்குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டம், மற்றும் அன்னிய செலவாணி மேலாண்மைச்சட்டம் ஆகியவற்றின் மூலம், சந்தேகத்திடமான பரிமாற்ற அறிக்கைகள், பணப்பரிமாற்றங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இதற்கிடையே டெல்லியில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆக்சிஸ் வங்கியின் ஊழியர்கள் இருவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios