கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஹவாலா ஏஜென்ட் ஒருவர் வீட்டு குளியல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ. 5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகள், 32 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் நேற்று கண்டுபடித்து பறிமுதல் செய்தனர்.

பிரதமர் அறிவிப்பு

நாட்டில் கள்ள நோட்டையும், கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கருப்பு பணத்தை வைத்துள்ளவர்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, அவர்கள் பதுக்கிய பணத்தையும்,தங்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ரகசிய தகவல்

இந்நிலையில், கர்நாடக மாநிலம், சித்ர துர்கா மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சல்லாகரே நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் எண்ணெய் உற்பத்திசெய்யும் மில்கள் அதிகமாக இருப்பதால், எண்ணெய் நகரம் என்று பெயர் உள்ளது. இங்குள்ள ஒரு ஹவாலா தரகர் ஒருவர் வீட்டில் ஏராளமான கணக்கில் வராதா பணம், தங்கம் குளியல் அறையில் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக, வருமான வரித்துறையின் நுன்னறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

பாத்ரூம் சுவர்

இதையடுத்து, வருமான வரித்துறையினர் நேற்று அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது குளியல் அறையில் உள்ள சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்களுக்கு பின்புறம், ரூ. 5.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளும், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வாஸ்பேசின் தொட்டிக்கு அடியில் 28 கிலோ தங்க பிஸ்கட்கள், 4 கிலோ நகைகள் பதுக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

ரூ.90 லட்சம்

மிகவும் நூதனமான முறையில், சுற்றை துறையிட்டு, அதில் இந்த பணத்தை பதுக்கி அதில், டைல்ஸ் கற்கள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. மேலும், ரூ. 90 லட்சத்துக்கு ரூ.100 மற்றும் ரூ.20 நோட்டுகளையும், ஏராளமான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர் சோதனை

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ கோவா மாநிலம் பானாஜி நகரில் நேற்று முன் தினம் வருமான வரித்துறையினர் சூதாட்ட விடுதிகள், தங்க நகை வியாபாரிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அவர்கள் கர்நாடக மாநிலம், ஹூப்ளி மற்றும் சித்ர துர்கா மாவட்டங்களில் இதுபோல் ஏராளமான கருப்புபணம் பதுக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர். அந்த தகவலின் படி சோதனை மேற்கொண்டோம். இன்னும் தொடர்ந்து இது போல் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம்,நகை கண்டுபிடிக்கப்படும்'' என்றனர்.

தபால் அதிகாரியிடம் ரூ.65 லட்சம்

ஐதராபாத்தில் உள்ள தபால்நிலைய மேலாளர் சுதிர் பாபுவிடம் இருந்து ரூ.65 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று பறிமுதல்செய்தனர். பழைய ரூபாய்களை கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுக்கிறார் என்று வந்த புகாரைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த பணம் சிக்கியது. ரூ.3.75 கோடி பழைய ரூபாயை ரூ.65 லட்சம் கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுத்துள்ளார். மேலும், ரூ.92.68 லட்சத்துக்கான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் பறிமுதல் செய்தோம் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர்த்த சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான பலஇடங்களில் ரூ.142 கோடி கைப்பற்றப்பட்டது. அதில் ரூ.10 கோடி புதிய ரூபாய் நோட்டுகளாகும்.மேலும், 127 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.